ஒருசமயம் புண்டரீக முனிவர், இங்குள்ள சோலையில் இருந்த மலர்களைப் பறித்து பகவானுக்கு அர்ச்சனை செய்ய எண்ணி, கூடையில் பறித்துக் கொண்டு கிழக்கு பக்கமாகச் செல்ல அங்கு சமுத்திரம் குறுக்கிட்டது. முனிவர் தமது கைகளால் தண்ணீரை இறைக்க ஆரம்பிக்க, இதைக் கண்ட பெருமாள் வயோதிக பிராமணர் வேடம் பூண்டு வந்து, தமதுக்கு உணவளித்தால் தாமும் உதவி செய்வதாகச் சொன்னார். புண்டரீக முனிவர் ஆகாரம் கொண்டு வருவதற்குள் பெருமாள் திருப்பாற்கடலில் சயனித்திருப்பதைப் போல் ஆதிசேஷன் இல்லாமல் தரையிலேயே சயனித்து ஸேவை சாதித்ததால் 'ஸ்தல சயனப் பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் ஸ்தல சயனப் பெருமாள் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் உலகுய்ய நின்ற பெருமாள். திருவடியருகில் புண்டரீக மஹரிஷி கைகூப்பியவண்ணம் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு நிலமங்கைத் தாயார் என்பது திருநாமம். புண்டரீக மஹரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலுக்கு எதிரேயுள்ள நந்தவனத்தில்தான் குருகத்தி மலரில் முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் திருஅவதாரம் செய்தார்.
மணவாள மாமுனிகள், பிள்ளைலோகம் ஜீயர் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 26 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 27 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|